17 Oct 2026
ஆரோக்கியம்

கர்ப்பகாலம்...

கவலையல்ல, கவனிக்க வேண்டிய காலம்!
பகிரவும் WhatsApp
கர்ப்பகாலம்...
கவலையல்ல, கவனிக்க வேண்டிய காலம்!
சங்கீதா
செய்தியாளர்
03 Sep 2026
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் புதிய உயிரை வரவேற்கும் இனிய பயணம். அந்தப் பயணம் ஆரோக்கியமாகவும், மனநிறைவுடனும் அமைய வேண்டுமனில் சரியான வழிகாட்டுதலும் விழிப்புணர்வும் அவசியம். இந்த நோக்கத்துடன், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னையின் மெட்ராஸ் சாய்ஸ் "தாய்-சேய் நலம்" குறித்த மகப்பேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த ஜூலை 16ஆம் தேதி நடைபெற்றது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான சத்தான உணவூமுறை, உடல் மற்றும் மனநல பராமரிப்பு, பாதுகாப்பான பிரசவம் மற்றும் உடற்பயிற்சி, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் தங்களது சந்தேகங்களை நிபுணர்களிடம் நேரடியாகக் கேட்டு தெளிவுபெற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு பயிற்றுனராக யோகா மற்றும் முத்திரைப்பயிற்சியாளர் சங்கீதா பாலச்சந்திரன் கலந்துகொண்டார். எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ள அவர், யோகா மற்றும் முத்திரைப் பயிற்சி துறையில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். ஆரோக்கியகான ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளித்துள்ள அவர், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

கர்ப்பகாலத்தில் தாயின் உடல் நலமும் மனநலமும் சமநிலையுடன் இருப்பதே, குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடிப்படை என்று அவர் வலியுறுத்தினார். கர்ப்பம் உறுதியான உடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்வது மிகவும் அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.

உணவுமுறையில் இருப்பச்சத்து, கால்சியம், புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை, காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பால் மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து உணவுகள் கர்ப்பிணிப் பெண்களின் அன்றாட உணவில் இடம்பெற வேண்டும். போதுமான அளவு தண்ணீர் அருந்துவதோடு, அதிக எணணெய், உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதும் நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டது.

கர்ப்பகாலத்தில் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படும் யோகா மற்றும் எளிய உடற்பயிற்சிகள் உடல் சோர்வு, முதுகுவலி, மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்க உதவுகின்றன. ஆனால் ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலையும் வேறுபடுவதால், மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே யோகா அல்லது உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்று சங்கீதா பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

கர்ப்பத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மூன்று மாதங்களுக்கும் தனித்தனி பயிற்சிகள் இருப்பதால், பயிற்சி பெற்ற நிபுணர்களின் வழிகாட்டுதலோடு மட்டுமே அவற்றை மேற்கொள்ள வேண்டும். உடலுக்கு அதிக அழுத்தம் தரும் பயிற்சிகளைத் தவிர்த்து, எளிமையான மற்றும் பாதுகாப்பான பயிற்சிகளையே தேர்வு செய்வது சிறந்தது என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

உடல் ஆரோக்கியத்துக்கு இணையாக மனநலமும் கர்ப்பகாலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூச்சுப்பயிற்சி, தியானம் மற்றும் நேர்மறையான சிந்தனை மன அமைதியை அதிகரிக்க உதவுகின்றன. குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகப்பெரிய பலமாக அமையும். மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்கும் தாயின் ஆரோக்கியம், குழந்தையின் வளர்ச்சிக்கும் நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும் என்று நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது.

பிரசவத்திற்கு முன்பும் பின்பும் தேவையான மருத்துவ பராமரிப்பு, பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம், தடுப்பூசிகளை உரிய நேரத்தில் செலுத்துவது, குழந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிப்பது போன்ற அம்சங்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

ஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க, தாயின் உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதுகாப்பது சமூகத்தின் பொறுப்பாகும். சரியான உணவு முறை, முறையான மருத்துவ ஆலோசனை, பாதுகாப்பான உடற்பயிற்சி, மன அமைதி மற்றும் குடும்பத்தின் ஆதரவு ஆகிய ஐந்து தூண்களே ஆரோக்கியமான தாய்க்கும், ஆரோக்கியமான குழந்தைப் பிறப்பிற்கும் அடித்தளமாக அமையும் என்ற செய்தியை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அழுத்தமாகக் தந்ததுள்ளது.


சாப்பிட வேண்டிய உணவுகள்

·         பச்சைக் கீரைகள்

·         பால் மற்றும் தயிர்

·         முட்டை அல்லது புரதச்சத்து நிறைந்த உணவுகள்

·         ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்கள்

·         சிறுதானியங்கள்

கர்ப்பிணிகளுக்கான பொன்னான 5 குறிப்புகள்

1.    காலை உணவை தவிர்க்காதீர்கள்
கர்ப்பகாலத்தில் காலை உணவு உடலுக்கும், வளரும் குழந்தைக்கும் தேவையான ஆற்றலை வழங்குகிறது.

2.    தினமும் 2.5-3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்
போதுமான நீர்ச்சத்து உடல் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.

3.    மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்
இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியம்.

4.    தினமும் போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்
குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவது தாயின் உடல் மற்றும் மனநலத்திற்கு நல்லது.

5.    தினமும் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள்
மருத்துவரின் ஆலோசனையுடன் மேற்கொள்ளும் நடைபயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

தவிர்க்க வேண்டியவை

·         மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து உட்கொள்வது

·         புகைபிடிக்கும் சூழலில் நீண்ட நேரம் இருப்பது

·         அதிக எண்ணெய் மற்றும் ஜங்க் உணவுகள்

·         நீண்ட நேரம் பசியுடன் இருப்பது

·         தேவையற்ற மனஅழுத்தம்


குடும்பத்தினரின் பங்கு

·         கர்ப்பிணிக்கு மன அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்குங்கள்.

·         சத்தான உணவை நேரத்திற்கு சாப்பிட உதவுங்கள்.

·         மருத்துவப் பரிசோதனைகளுக்கு உடன் செல்லுங்கள்.

·         அன்பாகப் பேசி, நேர்மறையான சூழலை உருவாக்குங்கள்.

யோகா செய்யும் முன்...

·         மருத்துவரின் அனுமதி பெறுங்கள்.

·         பயிற்சி பெற்ற யோகா நிபுணரின் வழிகாட்டுதலுடன் மட்டுமே பயிற்சி செய்யுங்கள்.

·         உடல் சோர்வாக இருந்தால் ஓய்வெடுங்கள்.

மூச்சுப் பயிற்சியை மெதுவாக மேற்கொள்ளுங்கள்.