17 Oct 2026
குழந்தைகள்

ஒவ்வொரு குழந்தையும் கற்கும் திறன் கொண்டவரே...

பகிரவும் WhatsApp
ஒவ்வொரு குழந்தையும் கற்கும் திறன் கொண்டவரே...
கவிப்ரியா ம
செய்தியாளர்
01 Sep 2026
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கற்றல் குறைபாடு (Learning Disability – LD) என்பது ஒரு குழந்தையின் புத்திகூர்மை குறைவைக் குறிப்பதல்ல; மாறாக, மூளை தகவல்களைப் பெறும், புரிந்துகொள்ளும், நினைவில் வைத்துக்கொள்ளும் மற்றும் வெளிப்படுத்தும் முறையில் ஏற்படும் நரம்பியல் சார்ந்த வேறுபாடாகும். இக்குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போலவே அறிவுத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் கற்றுக்கொள்ளும் முறை மட்டும் வேறுபட்டதாக இருக்கும்.

கற்றல் குறைபாடுகளில் டிஸ்லெக்ஸியா (Dyslexia) – வாசிப்பதில் சிரமம், டிஸ்கிராபியா (Dysgraphia) – எழுதுவதில் சிரமம், டிஸ்கால்குலியா (Dyscalculia) – கணிதச் செய்முறையைப் புரிந்துகொள்வதில் சிரமம் போன்றவை முக்கியமானவை. மேலும், சில குழந்தைகளுக்கு கவனக்குறைவு, நினைவாற்றல் குறைவு, மொழித் திறன் சிரமம் அல்லது செயல்களை ஒழுங்குபடுத்துவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளும் இருக்கலாம்.

குழந்தை படிப்பதைத் தவிர்ப்பது, ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் தவறாக எழுதுவது, எழுத்துக்களை மாற்றிப் படிப்பது, கையெழுத்து தெளிவில்லாமல் இருப்பது, எளிய வழிமுறைகளைக் கூட பின்பற்ற முடியாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மதிப்பீடு செய்ய வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரியாக பயிற்சி அளித்தால், குழந்தையின் கற்றல் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.

ஒரு கல்வியாளராகவும், கற்றல் குறைபாடு சிகிச்சையாளராகவும், ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான கற்றல் திறன் கொண்டவர்கள் என்பதில் நான் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன். குழந்தைகளின் ஆற்றலையும், அதன்மூலம் அவர்களின் பலவீனங்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதே நமது கடமையாகும். பன்முகன் (Multisensory) கற்றல் முறைகள், ஒலியியல் (Phonics), விளையாட்டு வழிக் கற்றல், காட்சி உதவிகள் மற்றும் செயல்கழிக் கற்றல் போன்ற அணுகுமுறைகள் குழந்தைகளின் கற்றலை எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுகின்றன.

ஒரு குழந்தையின் வெற்றிக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படுவது மிகவும் அவசியம். குழந்தையின் சிறிய முன்னேற்றங்களைக் கூட பாராட்ட வேண்டும். அவர்களின் முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். அன்பு, பொறுமை, புரிதல் மற்றும் தொடர்ச்சியான வழிகாட்டுதல் ஆகியவை குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் முக்கிய அம்சங்களாகும்.

கற்றல் குறைபாடு என்பது ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கு தடையல்ல. சரியான நேரத்தில் சரியான வழிகாட்டுதலும், பொருத்தமான கற்றல் சூழலும் கிடைத்தால், அவர்கள் கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க முடியும். இன்று நமது சமூகத்திற்கு மிகவும் தேவையானது இரக்கம் அல்ல; புரிதலும், ஏற்றுக்கொள்ளுதலும், சமமான கல்வி வாய்ப்புகளும்தான்.

"ஒவ்வொரு குழந்தையும் கற்கும் திறன் கொண்டவரே. அவர்களின் கற்கும் முறையைப் புரிந்துகொண்டு வழிநடத்துவது நமது பொறுப்பாகும். வேறுபாடுகளை மதித்து, திறமைகளை வளர்த்து, ஒவ்வொரு குழந்தையும் தன்னம்பிக்கையுடன் முன்னேற உதவுவோம்."